4,572 பேருக்கு ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

4,572 பேருக்கு ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

Update: 2023-05-18 19:47 GMT


4,572 பேருக்கு ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடக்கு தாலுகா எம்.சத்திரப்பட்டியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 4,572 பயனாளிகளுக்கு ரூ.29 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரத்து 571 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு கடந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு உள்ளன. மகளிர் பொருளாதார முன்னேற்றம் பெற்று சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று தமிழகத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களில் உள்ள 72 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.188 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கினார். நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1000

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன்தொகை ரூ.1000 கோடி தள்ளுபடி செய்து, மீண்டும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி உள்ளார். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மட்டும் 2,147 மகளிர் சுயஉதவிக்குழுக்களில், 19,752 நபர்களுக்கு ரூ.38.50 கோடி மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் அந்த தொகையினை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தையும், குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழக அரசு விளங்க வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் எண்ணம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த 2 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களையும், அறிவிக்காத பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்