உடன்குடியில்தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
உடன்குடியில்தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை என்.ஆர்.தனபாலன் வழங்கினார்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் நிறைவு நாளையொட்டி பாரதமாதா நண்பர்கள் அன்னதானக்குழு சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி -குலசேகரன்பட்டினம் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெ.முத்து தலைமை தாங்கினார். அன்னதானக்குழு ஆலோசகர்கள் கணேசன், சவுந்தரராஜன், கே.டி.முத்து, ராமு, சுந்தரேசபாண்டியன், மகேஷ்வரன், சிவராகவன், ஜெயபால், த.ம.மு.க. நெல்லை மாவட்ட செயலர் கண்மணி மாவீரன், ராஜா, மூர்த்தி, பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதமாதா நண்பர்கள் அன்னதானக்குழு நிறுவனத் தலைவர் ஆர்.சுந்தரபாண்டியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் என்.ஆர்.தனபாலன், ஏஸ்.டி.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று 1000 பேருக்கு தையல் எந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், சேலைகள் ஆகியவற்றை வழங்கினர். தந்தையை இழந்த மாணவனின் கல்விக்கு உதவித் தொகையும், 7 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.