போச்சம்பள்ளியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி 184 பயனாளிகளுக்கு ரூ.43.85 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Update: 2023-06-13 19:30 GMT

மத்தூர்:

போச்சம்பள்ளியில் நடந்த ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில் 184 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எம்.சரயு வழங்கினார்.

ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி

போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் உள்வட்டத்திற்குட்பட்ட பாரூர், கீழ்க்குப்பம், செல்லக்குட்டப்பட்டி, வாடமங்கலம் மற்றும் தாமோதரஅள்ளி கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கே.எம்.சரயு கலந்து கொண்டு 184 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, நில உடமை மேம்பாட்டு திட்டம், பரப்பு வித்தியாசம், கணினி திருத்தம், ஆட்சேபனை மனுக்கள், ஆக்கிரமிப்பு, பட்டா ரத்து, சான்றிதழ்கள் மற்றும் இதர துறை மனுக்கள் என ஏற்கனவே 470 மனுக்களும், இன்று 210 மனுக்கள் என மொத்தம் 680 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்

மேலும் 64 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் வீட்டுமனை பட்டாக்களும், 53 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 85 ஆயிரத்தில் இயற்கை மரண உதவித்தொகையும், 40 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், 10 பயனாளிகளுக்கு பட்டா மாற்றமும், 17 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். விழாவில் உதவி இயக்குனர் (நில அளவை) சேகரன், தாசில்தார் தேன்மொழி, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ராமசந்திரன், தனி தாசில்தார்கள் கங்கை, சுரேந்தர், நில அளவை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தாசில்தார்கள் சகாதேவன், பிரபாவதி, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயபிரபா, லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, மகேஷ்குமார் மற்றும் வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, வருவாய் துறை, பத்திரபதிவுத்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்