மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13½ கோடியில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

Update: 2023-06-12 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

மூன்று சக்கர வாகனம்

சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 45 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் வரவேற்று பேசினார். விழாவில் கலெக்டர் ஆஷா அஜீத் பேசியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் 37,000 மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் சென்று வருவதற்கு வசதியாக தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

ரூ.13½ கோடி மதிப்பில்

விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர வாகனங்களை வழங்கி பேசியதாவது:- இந்தியாவிலேயே தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக முன்னேறி வருகிறது. அனைத்து துறைகளிலும் இந்தியாவில் முதல் இடத்தில் பிடிக்க வேண்டும் என்பது நமது முதல்-அமைச்சரின் ஆவலாகும். கடந்த 2022-2023-ம் ஆண்டுகளில் மாவட்டத்தில் 5,553 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலமாக ரூ.13 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலை உயர்த்த பல்வேறு திட்டங்களை அளித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணி முத்து, சிவகங்கை நகர சபை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் பிரியா நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்