திறந்த வேனில் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட மாணவிகளுக்கு வரவேற்பு
திறந்த வேனில் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட மாணவிகளுக்கு வரவேற்பு
நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த மாணவிகள் திறந்த வேனில் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீட் தேர்வில் வெற்றி
மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் லெட்சுமிபிரியா, கீர்த்தனா ஆகியோர் பிளஸ்-2 படித்தனர். இவர்கள் 2 பேரும் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். மாணவி லெட்சுமிபிரியாவிற்கு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியிலும், மாணவி கீர்த்தனாவிற்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியிலும் அரசு உள்ஒதுக்கீட்டில் இடங்கள் கிடைத்தன.
உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றிபெற்று, இருவரும் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து முதன்முறையாக ஊருக்கு வந்த 2 மாணவிகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர்மக்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது.
திறந்த வேனில் ஊர்வலம்
விழாவில் அலங்கரிக்கப்பட்ட திறந்த வேனில் 2 மாணவிகளும் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். ஊர்வலத்தில் பள்ளி மாணவர்களின் தப்பாட்டம், கம்பு சண்டை, மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது. பள்ளியில் சாரண சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமை தாங்கினார். இதில் உள்ளிக்கோட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதி (உள்ளிக்கோட்டை), சரவணன் (தளிக்கோட்டை), பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கயல்விழி பொய்யாமொழி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரிதா, வர்த்தக சங்க தலைவர் அன்பரசன், அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலச்சந்திரன், விழா ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.