தூத்துக்குடி மாவட்டத்தில் 'ஜல் ஜீவன்' திட்டத்துக்கு வரவேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்கு கிராம மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், இன்னும் இந்த திட்டம் விரைவு படுத்தப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
'ஜல் ஜீவன் மிஷன்'
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஊதா நிற குழாய்கள் வரிசையாக வீடுகளுக்குள் புகுந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் சாத்தியமானது, ஜல் ஜீவன் மிஷன் என்னும் உயிர்நீர் இயக்கத்தால்தான். இந்த உன்னத திட்டம் 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் என்ற இலக்கோடு, 2019-ம் ஆண்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும், 2020-21-ம் ஆண்டில்தான் தூத்துக்குடி மாவட்டத்தை எட்டியது. அந்த ஆண்டே வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அதன்படி, 195 பஞ்சாயத்துகளில் உள்ள 734 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம் தீட்டப்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது. அதன் விளைவாக ஒரே ஆண்டில் ரூ.53 கோடியே 69 லட்சம் செலவில் 239 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 195 பஞ்சாயத்துகளில் உள்ள 1 லட்சத்து 11 ஆயிரத்து 154 குடியிருப்புகளுக்கு உயிர் நீரான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து 2022-23-ம் ஆண்டு 39 பஞ்சாயத்துகளில் உள்ள 115 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.14 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் 39 பஞ்சாயத்துகளிலும் 69 பணிகள் எடுக்கப்பட உள்ளது. இதன்மூலம் 16 ஆயிரத்து 231 வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு கிராம மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் இந்த அற்புதமான திட்டம் இன்னும் அநேக மக்கள் பயன்பெறும் வகையில் விரைவு பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தினமும் குடிநீர்
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆரைக்குளத்தை சேர்ந்த பூமாரி:-
எங்கள் கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம். நாங்கள் காலை 7 மணிக்கு விவசாய தோட்டத்துக்கு சென்று விடுவோம். இதனால் அதிகாலை நேரத்தில் பொது இடத்தில் உள்ள குடிநீர் நல்லியில் இருந்து வீட்டுக்கு தேவையான குடிநீரை எடுத்து வருவோம். அப்போது, ஒரே நேரத்தில் அந்த தெருவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் பிடிப்பதற்காக வரிசையில் காத்து நிற்போம். இதனால் எங்களால் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு விவசாய பணிக்கு செல்வதில் சிரமம் இருந்து வந்தது.
பொது நல்லியில் குடிநீர் பிடிக்கும்போதும் பிரச்சினைகள் இருந்து வந்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த ஆண்டு எங்கள் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்கள் வீட்டுக்கு தனியாக குடிநீர் இணைப்பு இருப்பதால் எந்தவித சிரமமும் இன்றி குடிநீர் கிடைக்கிறது. தினமும் குடிநீர் வருகிறது. ஒருவாரம் காலையிலும், ஒரு வாரம் மாலையிலும் தண்ணீர் வருகிறது. வீட்டுக்கு தேவையான அளவு தண்ணீரும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கிறது. அரை மணி நேரத்தில் வீட்டுக்கு தேவையான நீர் வீட்டுக்குள்ளேயே வந்து விடுகிறது. இதனால் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.
மதிப்பு உயர்ந்துள்ளது
தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டியை சேர்ந்த ஜெயசீலன்:- மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிலுவைப்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் முதல்கட்டமாக ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. எங்கள் பகுதியில் தனியாக குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்களுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. முன்பு எங்கள் பகுதியில் குடிநீர் இணைப்பு கிடையாது. இதனால் மக்கள் எங்கள் ஊரில் நிலம் வாங்கி குடியேற தயங்குவார்கள். தற்போது வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வந்து விட்டதால் எங்கள் ஊரின் மதிப்பு உயர்ந்து விட்டது. ஒரு செண்ட் நிலம் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகும் நிலைக்கு சென்று விட்டது. குடிநீர் திட்டத்தால் ஊர் வளர்ச்சி பெற்று உள்ளது.
காலம் மாறி போச்சு
தூத்துக்குடி அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் புதுப்பச்சேரியை சேர்ந்த மகாலட்சுமி:- எங்கள் கிராமத்தில் முன்பு பொதுநல்லியில்தான் அனைவரும் குடிநீர் பிடித்து வந்தோம். அப்போது ஏராளமான மக்கள் குடிநீர் பிடிப்பதற்காக வரிசையில் நிற்போம். ஒரு தடவை 4 குடம் தண்ணீர் பிடிப்போம். அந்த தண்ணீர் போதுமானதாக இருக்காது. இதனால் மீண்டும் தண்ணீர் பிடிக்க செல்லும்போது, நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டும். இவ்வாறு சிரமப்பட்டு குடிநீர் பிடித்து வந்தோம். இந்த சிரமங்களை எல்லாம் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் போக்கிவிட்டது. எங்கள் பகுதியில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.
எங்கள் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் நிரப்பி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் குடிநீர் கிடைக்கிறது. முன்பு குறைந்த அளவு குடிநீரே கிடைத்து வந்தது. தற்போது எங்களுக்குபோதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது. பொதுநல்லிகளில் கால்கடுக்க காத்து நின்ற காலம் மாறி வீடு தேடி தண்ணீர் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டை சேர்ந்த விஜயகுமார்:- எங்கள் பகுதியில் முன்பு பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வந்தோம். தற்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வருகிறது. எங்களுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் உள்ளது. எந்தவித பிரச்சினையும் இல்லை. அதே போன்று இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் அடிக்கடி நேரில் வந்து ஆய்வும் செய்து வருகின்றனர். இதனால் திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. அங்கன்வாடி, பள்ளிக்கூடங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த சிவராமன்:- ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சில பஞ்சாயத்துகளில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்காமல் சில கிராமங்கள் விடுபடுகின்றன. அதே போன்று சில பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்புக்கு பணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளை களைந்து திட்டத்தை விரைவுபடுத்தி சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் பல கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று உள்ளன.