ஜோலார்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு
திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை நகரம், ஒன்றிய பகுதிகளில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி தலைமையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜோலார்பேட்டை நகரம் சந்தைக்கோடியூர் பகுதியில் நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் எஸ்.கே.சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே. ஆர்.சூரியகுமார் ஆகியோர் பொறுப்பில் மேடை அமைத்து அதில் கலை நிகழ்ச்சி, தெருக்கூத்து, கிராம பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நையாண்டி, நாதஸ்வரம் தவில், கோலாட்டம் மயிலாட்டம், குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
7 இடங்களில்
ஜோலார்பேட்டை தொகுதி சார்பில் 7 இடங்களில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கையில் கொடிகள், பதாகைகளை ஏந்தி மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்செல்வி, நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா, உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். மேலும் சாலையில் இருபுறமும் வாழை மரங்களால் தோரணங்கள் அமைத்திருந்தனர்.