குமரி மாவட்டத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை

குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியது. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2022-09-08 16:08 GMT

களியக்காவிளை:

குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியது. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஓணம் பண்டிகை

கேரளாவில் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கடந்த 30-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்தில் மலையாள மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா தொற்று ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகள் ஓணம் பண்டிகை குமரியில் களையிழந்து காணப்பட்டது.

இந்தநிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் ஓணம்பண்டிகை களைகட்டியது. அதன்படி திருவோணம் பண்டிகையான நேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

அதன் ஒரு பகுதியாக மீனச்சல், குழித்துறை, ஆற்றூர் உள்ளிட்ட பகுதிகளில் மலையாள மொழி பேசும் மக்களின் கலாசார நிகழ்ச்சிகளான மோகினியாட்டம், திருவாதிரைகளி, வள்ளக்களி, தெய்யம், சிங்காரி மேளம் ஆகிய நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாவேலி மன்னர் வேடம் அணிந்து வீடு வீடாக மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள் கூறி மகிழ்விக்கும் ஊர்வலங்களும் நடைபெற்றது. குழித்துறையில் நடைபெற்ற மாவேலி மன்னர் வலம் வரும் நிகழ்ச்சியை குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.

இதேபோல் கோவில்கள், பொது இடங்கள், வீடுகளிலும் அத்தப்பூ கோலப்போட்டியும் நடந்தது. மதியம் ஓண சத்யா என்ற அறுசுவை உணவு குடும்பங்கள் ஒன்றிணைந்து சாப்பிடுவதும் முக்கியமான நிகழ்வாக வீடுகளில் நடைபெற்றது.

கோவில்களில்...

தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளிலும், குமாரகோவில் வேளிமலை முருகன்கோவில், பத்மநாபபுரம் ராமசாமி கோவில், பெருமாள்கோவில், நீலகண்டசாமி கோவில் போன்ற பல்வேறு கோவில்களில் பக்தர்கள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு செய்தனர்.

இதோபோல், வீடுகளின் முற்றத்தில் அத்தப்பூ கோலமிட்டும், புத்தாடை அணிந்து ஊஞ்சல் கட்டி ஆடியும் கொண்டாடினர். ஓண சத்யா என்ற விசேஷ உணவுகளை சமைத்து பலவிதமான பாயாசத்துடன் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். சிலர் மாற்றுமத நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஓண விருந்து அளித்தனர். சில பகுதிகளில் இளைஞர் மன்றங்கள் சார்பில் விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தி ஓண விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்