காட்டன் சேலைகள் விற்பனை குறைந்ததால் நெசவாளர்கள் கவலை

நெகமத்தில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் விற்பனை குறைந்ததால் நெசவாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதனால் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-10-06 18:45 GMT

நெகமம்

நெகமத்தில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் விற்பனை குறைந்ததால் நெசவாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதனால் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

காட்டன் சேலைகள்

கோவை மாவட்டம் நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான குள்ளக்காபாளையம், வதம்பச்சேரி, பூரண்டாம்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், காட்டம்பட்டி, தாசநாயக்கன்பாளையம், என்.சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவு தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு கோரா மற்றும் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அதிலும் சிலர், இந்த தொழிலை பாரம்பரிய குலத்தொழிலாகவும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது.

மாற்று வேலை

இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான சேலைகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, மேற்கு வங்காளம், போன்ற வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் நாள்தோறும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது.

கொரோனா காலத்துக்கு முன்பு வரையில், கைத்தறி புடவைகள் சீரான முறையில் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வந்தன. இதன் மூலம் வியாபாரிகளுக்கும், நெசவாளர்களுக்கும் ஓரளவு லாபம் கிடைத்தது. கொரோனா காலத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கைத்தறி சேலைகள் அனுப்புவது முற்றிலும் முடங்கியது. இது ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் பலர் வேலையின்றியும், வருமானமின்றியும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர். மேலும் மாற்று வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நிலுவை தொகை

இந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. குறிப்பாக தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை களைகட்டும் என்று ஒவ்வொரு நெசவாளர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை குறைந்து வருகிறது. இது தவிர வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்ட சேலைகளுக்கு வர வேண்டிய நிலுவை தொகையையும் வசூல் செய்ய முடியாத நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கவலை அடைந்துள்ளனர்.

நிவாரணம்

இதுகுறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:-

நெகமம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகளின் விற்பனை குறைந்து வருகிறது. இதனால் நெசவாளர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பம் நிலை உள்ளது. இதை மத்திய மற்றும் மாநில அரசுகள் உணர்ந்து ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை நேரத்தில் குறைந்தபட்ச நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வரை வழங்க வேண்டும்.

மேலும் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரிகளை வியாபாரிகள் முறையாக செலுத்தி உள்ளதால், அவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை திருப்பி வழங்கவேண்டும். தொழில் நஷ்ட நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் வரையிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்