முழுமனதாக ஏற்றுவிட்டோம்:இந்தியாவுக்கு மோடிதான் மீண்டும் பிரதமர்- செல்லூர் ராஜூ பேட்டி

இந்தியாவுக்கு மோடிதான் மீண்டும் பிரதமர் என்று முழுமனதாக ஏற்றுவிட்டோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2023-09-22 00:16 GMT


இந்தியாவுக்கு மோடிதான் மீண்டும் பிரதமர் என்று முழுமனதாக ஏற்றுவிட்டோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

அ.தி.மு.க.வில் இணைந்தனர்

மதுரை பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய சிலர் நேற்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குபின் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் எந்த முடிவையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் அறிவிப்பார். எங்களுக்கும் பா.ஜனதாவுக்கும், எந்த பிரச்சினையும் இல்லை. எங்களை பற்றி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தவறாக பேசுகிறார் என்று சொன்னோம். எங்கள் தலைவர் அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசியதால்தான் நான் மற்றும் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பதிலடி கொடுத்தோம்.

அண்ணாமலையின் நடைபயணத்தை பற்றி நாங்கள் எந்த குறையும் சொல்லவில்லை. அவர் பா.ஜனதா கட்சியை வளர்ப்பதற்காகத்தான் மாநில தலைவராக இருக்கிறார். இந்தியாவிற்கு மோடிதான் மீண்டும் பிரதமர். இதை நாங்கள் முழுமனதாக ஏற்றுக்கொண்டு விட்டோம். அதேவேளையில் தமிழகம் என்று வந்துவிட்டால் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சராக ஆக வேணடும் என்பதனை பா.ஜனதா ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தான் கூட்டணி தர்மம்..

சனாதனம்

உதயநிதி எந்த வரலாறும் தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். விளையாட்டு துறை அமைச்சரான அவர், இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். சனாதனம் தமிழகத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது. தொட்டால் பாவம், பார்த்தால் தீட்டு என்பதெல்லாம் மறைந்து போய் விட்டது. சீர்திருத்த திருமணம் தமிழகத்தில் நடந்து வருகிறது.

அ.தி.மு.க.வில் எப்போதும் எந்த பேதமும் இல்லை. எங்கள் கட்சியில் தலைவராக ஒரு முஸ்லீம் இருக்கிறார். தி.மு.க.வின் தலைவராக ஒரு ஆதிதிராவிடர் அல்லது சிறுபான்மையினர் வர முடியுமா? என உதயநிதி ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்