இளைஞர்களிடம் கஞ்சா பழக்கத்தை தடுக்க வேண்டும்
இளைஞர்களிடம் கஞ்சா பழக்கத்தை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 14 வயது பள்ளி மாணவி காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராஜினேஷ் பைக்காரா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் தோடர் இன பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:- பள்ளி மாணவி கொலையில் மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை நடந்த அன்று தாமதமாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கொலை நடந்து 4 நாட்களாக எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி மாணவிகளை ஊட்டி-கூடலூர் செல்லும் அரசு பஸ்களில் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களை ஏற்றி செல்வதில்லை. பள்ளி மாணவி அன்றைய தினம் கைகாட்டியும், 3 பஸ்கள் நிற்கவில்லை. ஒருவேளை ஏதாவது ஒரு பஸ்சை நிறுத்தி மாணவியை ஏற்றி இருந்தால், அவர் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இளைஞர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாக புழங்குகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.