நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்

நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்

Update: 2023-05-08 18:45 GMT

பொறையாறு:

பொதுமக்கள் அனைவரும் நீர்நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

குளம் வெட்டும் பணி

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சந்திரபாடி ஊராட்சியில் கடல்நீர் உட்புகுதலை தடுத்து, நீர்நிலைகளை பாதுகாத்து, நிலத்தடி நீரினை நன்னீராக மாற்றம் செய்து சீரமைக்கும் பணியாக மாவட்டத்தில் முதல் முறையாக புதிய குளம் வெட்டும் பணி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ராமலிங்கம்,எம்.பி.நிவேதா முருகன், எம்.எல்.ஏ.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ்குமார் வரவேற்றார். இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குளம் வெட்டும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:- மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடல்நீர் உள்ளே புகாத வகையில் கடல் முகத்துவாரத்தில் தடுப்பணைகள் கட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்

இந்தியாவிலேயே நீளமான கடற்கரைகள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 14 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன. இந்த கடற்கரையோர மாவட்டங்களை பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டருக்கு நீர்நிலைகளில் பல்வேறு நாட்டு மரங்களை நடவு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் நிலைகளையும், நீராதாரங்களையும் பாதுகாக்க அரசு, அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சந்திரபாடி, ஊராட்சியில் விரைவில் கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்கை மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா,ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் செந்தில்குமார், தொண்டு நிறுவன நிர்வாகி நிமல்ராகவன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, தாசில்தார் காந்திமதி, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ பஞ்சாயத்தார்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்