துணிவுடன் மக்களை சந்தித்து உரிமையோடு வாக்கு கேட்கிறோம்முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

செல்லூர் ராஜூ பேட்டி

Update: 2023-02-14 19:30 GMT

அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டதால் துணிவுடன் மக்களை சந்தித்து உரிமையோடு வாக்கு கேட்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திண்ணை பிரசாரம்

ஈரோடு ஆலமரத்தெருவில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திண்ணை பிரசாரம் செய்தார். அப்போது அவர், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் குறித்தும் தற்போதைய ஆட்சியில் அந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டிருப்பது குறித்தும் விளக்கி பிரசாரம் செய்தார். மேலும் தி.மு.க. கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் பால் பாக்கெட்டை வைத்தும், மின்கட்டண ரசீதை வைத்தும் வாக்காளரிடம் நூதன முறையில் திண்ணை பிரசாரம் செய்தார்.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கடந்த 25 மாதங்களில் தி.மு.க.வினர் என்ன செய்தார்கள் என்ற உண்மையை மக்களிடம் சொல்கிறோம். மக்கள் வாங்குவதை வாங்கிக்கொண்டு உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் என சொல்கின்றனர். நூதன முறையில் பிரசாரம் செய்யும் அமைச்சர்களை போல் எங்களால் பிரசாரம் செய்யமுடியாது. நாங்க என்ன தப்பு செய்தோம் என்று கூறி மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டு வருகிறோம்.

தி.மு.க.வுக்கு சுனாமி தான்...

காங்கிரஸ் வேட்பாளருக்காக அனைத்து அமைச்சர்களும் வந்துவிட்டனர். எங்கள் மடியில் கனம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம். அகில இந்திய அளவில் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றி இருக்கிறோம். துணிவோடு மக்களை சந்திக்கிறோம்.

உரிமையோடு வாக்கு கேட்கிறோம். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் தி.மு.க. அமைச்சர்கள் முகத்தில் கவலை ஓடுகிறது. தங்கள் வீட்டு பிள்ளையாக மக்கள் முக மலர்ச்சியோடு எங்களை வரவேற்கின்றனர். எடப்பாடி பழனிசாமி அலை அடிக்கிறது. இந்த தேர்தல் தி.மு.க.விற்கு சுனாமி தான். தேர்தல் முடிந்த பின்னர் முதல் -அமைச்சர் வருத்தப்படுவார், கவலைப்படுவார். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் கவனமுடன் செயல்பட வேண்டும் என நினைப்பார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்