தீவிர கண்காணிப்பால் ஐஸ் போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளோம் -போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தீவிர கண்காணிப்பால் ஐஸ் போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளோம் என்று போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்து உள்ளார்.

Update: 2023-09-10 18:42 GMT

தீவிர கண்காணிப்பால் ஐஸ் போதை பொருள் கடத்தலை தடுத்துள்ளோம் என்று போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்து உள்ளார்.

தங்கம் கடத்தல்

இந்தியாவில் தங்கம் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் உரிய கணக்கு காட்டி தங்கம் வாங்கி விற்பனை செய்வதற்கு பதிலாக கடத்தல் மூலம் தங்கத்தை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் அதிகளவில் கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். இவ்வாறு தங்கம் மற்றும் போதைப்பொருள் ஆகியவற்றை கடத்தி கொண்டு வருவதற்கு இந்திய நாட்டிற்கே வழித்தடமாக அமைந்துள்ளது தமிழகம்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதிதான். ஏனெனில் இலங்கையில் தங்கம் மீது இறக்குமதி வரி கிடையாது என்பதால் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை வாங்கி வந்து இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகத்திற்குள் கொண்டு வந்து அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து விற்பனை செய்கின்றனர்.

ஐஸ் போதை பொருட்கள் கடத்தல்

இதேபோல போதைப்பொருள்களும் அதிகளவில் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதி வழியாக கடத்தி வரப்படும் தங்கம், போதைப்பொருள் போன்றவை நாடு முழுவதும் அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் ராமநாதபுரம் மாவட்ட கடல்வழியாக குறிப்பாக வேதாளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக 60 கிலோவிற்கும் அதிகமான தங்கம் கடத்தி வந்து பிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கைக்கு கடத்த இருந்த 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து கொண்டு சென்று இலங்கையில் 126 கிலோ போதைப்பொருளுடன் பாம்பனை சேர்ந்த 3 பேர் சிக்கி உள்ளனர். இவ்வாறு கடத்தல் கேந்திரமாக மாறி உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதி வழியாக கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த ஐஸ் போதைப்பொருளை மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளை போலீசார் துப்பு துலக்கி அவர்களை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

கண்காணிப்பு

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் கேட்டபோது கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக தங்கம் கடத்தி வருவதை தடுக்கவும், போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதை தடுக்கவும், காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். சமீபத்தில் பிடிப்பட்ட தங்கம் மற்றும் போதைப்பொருள் போன்றவை தொடர்பாக கைதானவர்கள் கடத்தலுக்கு புதியவர்களாக உள்ளனர். மாவட்ட காவல்துறையின் சார்பில் தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிக்கும் 36 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

அவர்களில் சமீபத்திய கடத்தல்காரர்கள் யாரும் இல்லை. எனவே, சிக்கிவிடக்கூடாது என்று கருதி புதியவர்களை பணத்தாசை காட்டி கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

எங்களின் தீவிர கண்காணிப்பு காரணமாக ஐஸ் போதைப்பொருளை கடத்தி செல்வதை தடுத்து கைப்பற்றி உள்ளோம். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்களை தொடர்ந்து கண்காணித்து சரியான நேரத்தில் ஆதாரங்களுடன் கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார

Tags:    

மேலும் செய்திகள்