2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி உறுதியானதாக இப்போதே சொல்ல முடியாது -அண்ணாமலை
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி உறுதியாகி விட்டதாக இப்போதே யாரும் சொல்ல மாட்டார்கள் என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் பா.ஜ.க. இருந்தாலும் அதில் எங்களின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். கூட்டணி குறித்த அமித்ஷாவின் கருத்தை நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.
2 மணி நேரத்திற்கும் மேலாக அமித்ஷாவிடம் சில கருத்துகளை பேசிவிட்டு வந்துள்ளேன். தமிழகத்தில் பா.ஜ.க. குறித்தும், தொண்டர்களுடைய விருப்பம் என்ன, தலைவர்களின் விருப்பம் என்ன என்பது குறித்தும் பேசியுள்ளேன்.
தூய்மையான அரசியல்
தமிழக அரசியல் சூழல் எப்படி மாறி வருகிறது என்றும் பேசியுள்ளேன். அ.தி.மு.க. எங்களுடன் கூட்டணியில் இல்லை என்று நான் சொல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இப்போது அ.தி.மு.க. ஒரு அங்கமாக இருக்கிறது. எந்த கட்சியின் மீதும் பா.ஜ.க.விற்கு எந்த கோபமும் இல்லை.
2024-ல் தூய்மையான அரசியல் எதிரொலிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இதேபோல், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி என்பது முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் 9 மாதங்கள் இருக்கிறது.
தண்ணீரில் எழுதுவது
கூட்டணியில் சீட் எவ்வளவு கிடைக்கும், கொள்கை எப்படி இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் இருக்கிறது. கூட்டணியை பொறுத்தவரை எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியம் இல்லை. அது தண்ணீரில் எழுதுவது போன்றது. இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் முன்னுரையும், முடிவுரையும் இப்போதே எழுதிவிட முடியாது.
தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் அளவிற்கு எங்களின் வேட்பாளர்கள் இருக்க வேண்டும். மாற்றத்திற்கான எழுச்சியை இப்போதே பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.
கூட்டணி உறுதியா?
2024-ம் ஆண்டு தேர்தலுக்கு கூட்டணி உறுதியாகிவிட்டது என்பதை யாரும் இப்போதே சொல்ல மாட்டார்கள். அ.தி.மு.க. பலமாக இருக்கிறதா, இல்லையா என்று நான் சொல்ல மாட்டேன். அந்த கட்சி ஒரு வழியில் பயணித்துக்கொண்டிருக்கிறது. நான் பதில் சொன்னால் அது சரியாக இருக்காது.
கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருக்கும். தொகுதி ஒதுக்கீடு குறித்து இப்போதே பேச வேண்டிய அவசியம் இல்லை. தென்காசி, ராமநாதபுரத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. வரும் 8-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
மோசடி நிதிநிறுவனங்கள்
பல ஊராட்சி பிரதிநிதிகள் பா.ஜ.க.வில் இணைய நேரடியாக வருகிறார்கள். அவர்களை இப்போது பா.ஜ.க.வில் நீங்கள் இணைய வேண்டாம். 5 ஆண்டுகள் உங்களின் திறமையை மக்களிடம் காட்டிவிட்டு பின்னர் வந்து இணைந்துகொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி வருகிறேன்.
மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
ஆன்லைன் ரம்மியை பொறுத்தவரை சட்டமன்றத்தில் சரியான மசோதாவை அரசு இயற்றவில்லை. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சரியான மசோதாவை இயற்ற வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மாநிலத்திற்கு உரிமை இருக்கிறது.
கவர்னருக்கு 2-வது முறை தடை மசோதாவை அனுப்பி உள்ளார்கள். அவர் கண்டிப்பாக கையெழுத்து போட்டுத்தான் ஆக வேண்டும்.
பெங்களூருவில் இருந்து நான் சென்னை விமான நிலையம் வந்த போது நிர்மலா சீதாராமன் டெல்லி செல்ல வந்தார். எஸ்.பி.வேலுமணி மதுரை செல்ல வந்தார். அப்போது, 3 பேரும் மரியாதை நிமித்தமாக சந்தித்துக்கொண்டோம். இதில், எந்த அரசியலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.