முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசிக்க தனிப்பாதை அமைக்கப்படுமா?

ராமேசுவரம் கோவிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசிக்க தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-10 16:39 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் கோவிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசிக்க தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம் கோவில்

வாரணாசி காசி விசுவநாதர் கோவிலுக்கு இணையானதாக போற்றக்கூடியதும், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் கருதப்படுவது, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் ஆகும்.

புண்ணிய தலம் என்பதால், ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி, அதன்பின் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாடி சாமி-அம்மனை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். முன்னோர் வழிபாட்டுக்கும் உகந்த தலமாக ராமேசுவரம் விளங்குவது சிறப்புக்குரியது.

துன்பங்கள், நோய்-நொடிகள் நீங்கவும், நல்லகாரியங்கள் நடக்கவும், இல்லங்களில் மகிழ்ச்சி நிலைக்கவும் கடவுளை வேண்டி, பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். ஆனால், ராமேசுவரம் கோவிலுக்கு வந்து செல்வது பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்களை கொடுத்து விடுகிறது. இதுவே கோவிலுக்கு வரும் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது..

கட்டணம்

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள், அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது.

பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதில் மட்டும் கோவில் நிர்வாகம் கவனம் செலுத்துவதாகவும், குறிப்பாக ரூ.100, ரூ.200 என சிறப்பு தரிசன கட்டண பாதைகளை அமைத்து உள்ளனர் என்றும், இலவச தரிசன பாதையில் வரும் சாமானிய மக்களை அலட்சியம் செய்வதாகவும் கூறுகிறார்கள்.

கடந்த வாரம் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை காலமாக இருந்ததால் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் சாமி தரிசனம் செய்ய சரியான வசதி இல்லாததால், பலர் தரிசனம் செய்ய முடியாமலும், சரியாக சாமியை பார்க்க முடியாமலும் மிகுந்த மன வருத்தத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.

குறிப்பாக சாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதி, 3-ம் பிரகாரம் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் எளிதாக செல்ல முடியாத வகையில், பல இடங்களில் பாதைகளை மறித்து தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு சிரமப்பட்டதாக தெரிவித்தனர். பக்தர்கள் அவசவுகரியமின்றி தரிசனம் செய்து செல்கிறார்களா என்பதை கோவில் அதிகாரிகள் கவனிப்பது இல்லை என்றும், பக்தர்கள் மூலம் அதிக வருமானம் வந்தால்போதும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்