தேனியில் கோடை காலத்திலும் வீணாகும் குடிநீர்

தேனியில் கோடை காலத்திலும் குடிநீர் வீணாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

Update: 2023-05-17 20:45 GMT

தேனியில் கோடை காலத்திலும் குடிநீர் வீணாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

குடிநீர் வினியோகம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக வைகை அணையில் இருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. அந்த குடிநீர் அங்கிருந்து பம்பிங் செய்து குருவியம்மாள்புரத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு சுத்திகரிப்பு செய்து அதில் குளோரின் சேர்த்து குழாய் மூலம் தேனி கே.ஆர்.ஆர். நகரில் உள்ள பிரமாண்ட குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றி, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

வீணாகும் குடிநீர்

இதில், கே.ஆர்.ஆர். நகரில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் நிரம்பும் போது, அடிக்கடி குடிநீர் வீணாகிறது. நீரேற்றும் பணியின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மீண்டும் மின்சாரம் வந்தால் அவை முறையாக பம்பிங் செய்யப்படாமல் சாலையில் தண்ணீர் வீணாக ஓடுவது வழக்கமாக உள்ளது. அடிக்கடி இவ்வாறு குடிநீர் வீணாகி வருகிறது.

அதன்படி, நேற்று காலையிலும் கே.ஆர்.ஆர். நகரில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வீணாகி மெயின் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் பெருக்கெடுத்தது. மேலும் சிவாஜி நகர் சாலையில் சாக்கடை கால்வாய் ஆழம் குறைவாக இருந்ததால், நிரம்பி வழிந்து சாலையில் ஆறாக குடிநீர் ஓடியது.

கோடைகாலமான தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சுத்திகரிக்கப்பட்டு குளோரின் சேர்க்கப்பட்ட குடிநீர் சாக்கடை கால்வாயிலும், சாலையிலும் ஓடி வீணாகியதை பார்த்த பொதுமக்கள் வேதனை அடைந்தனர். அடிக்கடி இதுபோல் குடிநீர் வீணாவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்