நீர்வரத்து 6,500 கனஅடியாக குறைந்தது ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக குறைந்ததால் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-20 18:27 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக குறைந்ததால் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த 18-ந் தேதி முதல் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

அருவியில் குளிக்க அனுமதி

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையை மாவட்ட கலெக்டர் சாந்தி நீக்கி உத்தரவிட்டார். அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரிசல்கள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்