பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிட வேண்டும்

பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிட வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2023-09-22 11:58 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் விஜயராகவன் (பொது), வெங்கடேசன் (வேளாண்), மாவட்ட வன பாதுகாவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் பேசியதாவது:-

கண்காணிப்பு கேமராக்கள்

வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி விவசாய நிலப்பகுதிக்குள் வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மாவட்டங்களில் யானைகள் வருவதை அலாரம் மூலம் வனத்துறையினர் தெரிந்து கொள்கின்றனர். அவ்வாறு முன்கூட்டியே தெரிந்து கொண்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

மழைக்காலம் என்பதால் விவசாயிகள் என்ன பயிர் செய்ய வேண்டும். உரங்கள் இருப்பு, மழை பெய்யும் தகவல் உள்ளிட்ட விவரங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். காட்பாடி- குடியாத்தம் செல்லும் சாலையில் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

தண்ணீர் திருப்பிவிட வேண்டும்

பழையதொண்டான்துளசி மற்றும் சில கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் அங்கு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் குட்டையை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ஏரிக்கரைகள், நீர்வரத்து கால்வாய் பகுதிகளில் மரக்கன்றுகள் நட வேண்டும். தற்போது பாலாற்றில் தண்ணீர் வருவதால் அங்கிருந்து செதுவாலை, விரிஞ்சிபுரம் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விட வேண்டும்.

மாடுகள் வளர்ப்பதற்கு கூட்டுறவு வங்கிகளில் கன் உதவி வழங்க வேண்டும். அகரம்சேரியில் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மணல் குவாரி அமைப்பதை தடைசெய்ய வேண்டும். ஒய்யாத்தூர் ஏரியில் வேறு ஏரியில் வழங்கப்படும் ரசீதை வைத்து சட்டவிரோதமாக மணல் எடுக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கடும் நடவடிக்கை

பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் மட்டுமே பேச வேண்டும். வேறு குறைகள் குறித்து பேசினால் விவசாய தேவைகள் முழுவதும் பூர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்படும். பாலாற்றில் வரும் தண்ணீரை ஏரிகளுக்கு திருப்பி விடுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். கால்நடைகள் வளர்ப்புக்கு மானியம் வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அகரம்சேரியில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடைபெறும். அதில் விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று விவசாயிகள் தெரிவித்த குறைகள் மற்றும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்