குழாயடியில் குடங்களுடன் குடிநீருக்கு காத்துக்கிடக்கும் பெண்கள்

நாகை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், குழாயடியில் பெண்கள் குடங்களுடன் குடிநீருக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நீர் ஆதாரம் பெருக நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-03-29 19:15 GMT

நாகை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், குழாயடியில் பெண்கள் குடங்களுடன் குடிநீருக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நீர் ஆதாரம் பெருக நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோடை காலம்

கோடை காலம் நெருங்கி வருவதால் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். நாகை மாவட்டத்தில் கோடை காலத்தையொட்டி குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது.

கிராம பகுதிகளில் இப்போதே பெண்கள் கைகளிலும், தலையிலும் காலி குடங்களை வைத்துக்கொண்டு குடிநீரை தேடி அலைவதையும், ஆண்கள் மோட்டார் சைக்கிள்களில் குடங்களை கட்டிச்செல்வதையும் பார்க்க முடிகிறது.

வினியோகம் குறைந்தது

குடிநீர் குழாயடியில் குடங்களை வரிசையாக அடுக்கி வைத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க நடக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

நாகை மாவட்டத்தில் வினியோகிக்கப்படும் குடிநீர் வழக்கத்தை விட குறைந்து விட்டது. இதனால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வழியின்றி திண்டாடி வருகிறார்கள்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம்

நாகை மாவட்டத்தில் கொள்ளிடம், வேளாங்கண்ணி, கே.வி. கோட்டகம், மேலவாஞ்சூர், அகர ஒரத்தூர், வேதாரண்யம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் 80 சதவீதத்துக்கும் மேல் கொள்ளிடம் ஆற்றின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கோடை காலம் ஆரம்பிக்கும் தருவாயில் கொள்ளிடத்தில் நீர் ஆதாரம் குறைந்து விட்டதால், போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் செல்லும் கடைமட்ட பகுதிகளான கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீர் வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நடவடிக்கை வேண்டும்

கோடை காலம் நெருங்கி விட்டதால் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வினியோக அளவு குறைந்த விட்ட நிலையில் நகராட்சி, பேரூராட்சிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் முழுமையாக கிடைப்பதில்லை. எனவே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளை ஒட்டி உள்ள நீர் ஆதாரங்களை கண்டறிந்து ஆழ்துளை கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளை அமைத்து அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று நாகை மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சமையலுக்கு கூட தண்ணீர் இல்லை

இதுகுறித்து நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள கருங்கண்ணியை சேர்ந்த ரவிச்சந்திரன் கூறியதாவது:-

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சியில் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் திருக்குவளை வழித்தடத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எங்கள் பகுதியில் சுமார் 20-ல் இருந்து 25 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிதண்ணீர் வருவது கிடையாது. இதனால் சமையல் செய்வதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம்.

அவல நிலை

திருப்பூண்டி - காமேஸ்வரம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயின் காற்று வெளியேறும் பகுதியில் இருந்து வரும் தண்ணீரை 2 கிலோமீட்டர் சென்று பிடித்து வருகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டால், கொள்ளிடம் கூட்டு குடிநீர் உற்பத்தியாகின்ற இடத்திலிருந்து குறைந்த அளவே தண்ணீர் வருகிறது என்றும், அங்கே உள்ள மின் மோட்டார் அடிக்கடி பழுது ஏற்படுவதால், குடிதண்ணீர் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் வரும் கோடை காலத்தில், குடிநீர் இல்லாமல் உயிர் வாழ்வது கடினம். எனவே பொதுமக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு அரசு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிக்க தகுதி இல்லாத தண்ணீர்

வாழ்மங்கலம் பகுதியை சேர்ந்த சுமித்ரா:-

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வழங்கப்படும் குடிநீர் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு வழங்கப்படும் குடிநீரின் அளவு குறைவாக உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பெரும்பாலான குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீர் குடிக்க தகுதியற்றதாகவே உள்ளது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்