தேர்தல் மோதல் வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
தேர்தல் மோதல் வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.;
சென்னை,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 2009-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, திமுக, சார்பில் தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர் உள்ளிட்ட திமுகவினர், பேயன்விளை கிராமத்தில் வாக்கு சேகரித்தனர்.
அப்போது, அதிமுக, தேர்தல் அலுவலகம் முன் நின்று திமுகவுக்கு அவர் வாக்கு சேகரித்தபோது, அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டனர். இதனால், ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதல் சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதில், திமுகவைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 16 பேர் மீது குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தபோது, அதில் அனிதா ராதாகிருஷ்ணன் பெயர் இல்லை. இந்த வழக்கு திருச்செந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த தூத்துக்குடி கோர்ட்டு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை வழக்கில் சேர்த்து கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கில் தன்னை சேர்த்துள்ளதாக, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கும் போது சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் கேட்க அவசியம் இல்லை. அப்படி ஒரு நடைமுறையும் இல்லை எனக்கூறி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.