பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டம் அல்லிநகரம் அம்பேத்கர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அஜித் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த 16 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகினார். அந்த மாணவியுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார்.
பின்னர் அந்த மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தினார். இதனால், அவர் அந்த மாணவியிடம் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு இடையே நடந்த செல்போன் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், தான் கூப்பிடும் இடத்துக்கு வர வேண்டும் என்றும் மிரட்டினார்.
அவருடைய மிரட்டலுக்கு பயந்த மாணவி, அவர் அழைத்த இடத்துக்கு சென்றார். அங்கு அந்த மாணவியை அஜித் பாலியல் பலாத்காரம் செய்தார். மீண்டும் அந்த மாணவியை அஜித், தன்னுடன் வருமாறு அழைத்தார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தனது தாயிடம் கூறினார். இதுதொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சிறுமியின் தாய் புகார் செய்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு, தேனி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விவேகானந்தன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவில், அஜித்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து அஜித்தை கோர்ட்டில் இருந்து போலீசார் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.