கிறிஸ்துமஸ், புத்தாண்டு: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.;
ஊட்டி,
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு டிசம்பர் மாதம் 25, 27, 29, 31 ஆகிய 4 நாட்கள் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது. அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 26, 28, 30 ஆகிய தேதிகளிலும் ஜனவரி மாதம் 1-ந் தேதியும் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.