பெரிய கண்மாயில் தண்ணீர் இருப்பு:2-ம் போக நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டம்

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தண்ணீர் இருப்பு உள்ளதால் 2-ம் போக நெல்சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Update: 2022-12-15 18:45 GMT

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தண்ணீர் இருப்பு உள்ளதால் 2-ம் போக நெல்சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.

பருவமழை ஏமாற்றியது

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந் தேதி தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த அக்டோபர் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், காலதாமதமாக நவம்பர் முதல் வாரத்தில்தான் மழை பெய்யத்தொடங்கியது.

ஒரு சில நாட்கள் மட்டுமே கோடை மழை போல் பெய்த வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு விவசாயிகளையும் ராமநாதபுரம் மாவட்ட மக்களையும் ஏமாற்றியது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பெரிய அளவில் மழை இல்லை. பெய்த கனமழையும் பயனின்றி கடல்பகுதியில் தான் பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல் விவசாயிகள் பாதிப்பு

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்த்து சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டரில் நெல் விவசாயம் செய்திருந்த விவசாயிகள் மழையில்லாமல் போனதால் கடும் ஏமாற்றமடைந்தனர். இதனால் பல பகுதிகளில் தேவையான நேரத்தில் மழை பெய்யாததால் பயிர்கள் கருகிவிட்டன. நெல்மணிகள் வரும்முன்னரே பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நிலையில் டிசம்பர் இறுதியில் மழைபெய்யும் என எதிர்பார்த்து பல பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து மீண்டும் உழுது பருத்தி உள்ளிட்டவைகளை பயிரிட தொடங்கி விட்டனர். மாவட்டத்தில் வைகை தண்ணீர் பாயாத பகுதிகளில்தான் இந்த நிலை உள்ளது. ஆனால், வைகை தண்ணீர் பாயும் பகுதிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பருவமழைக்கு முன்னதாகவே வைகை தண்ணீரால் நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயத்துக்கு கை கொடுத்து உள்ளது.

2-ம் போக சாகுபடி

இதுகுறித்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் பாசன மூத்த விவசாயி பாலசுந்தர மூர்த்தி கூறியதாவது:-

பெரிய கண்மாயில் இந்த ஆண்டு 7 அடிக்கு தண்ணீர் நிரம்பியதால் தற்போது வரை விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்தது போக 4 அடிக்கும் அதிகமான தண்ணீர் உள்ளது. தற்போது நெற்பயிர் 65 நாட்கள் பயிராக உள்ளது. தற்போது பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரில் ஒரு அடி வரை பயன்படுத்தி அறுவடை செய்துவிடுவோம். மீதம் உள்ள தண்ணீரையும், வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் கணக்கில் உள்ள தண்ணீரையும் பயன்படுத்தி இந்த ஆண்டு 2-ம் போக நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கேற்ப வைகை அணையில் ராமநாதபுரம் கணக்கில் உள்ள 1,600 மில்லியன் கனஅடி தண்ணீரை 10 நாட்களுக்குள் திறந்து பெற்று நிரம்பாத நீர்நிலைகளை நிரப்பி திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்