மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது.

Update: 2023-01-28 23:13 GMT

மேட்டூர்:

டெல்டா பாசனம்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம், அணை நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பருவ மழை முன்னதாகவே தொடங்கியதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு குறித்த தேதிக்கு முன்னதாகவே அதாவது ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவே மே 24-ந் தேதி அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதி மாலையுடன் நிறுத்தப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் நேற்று மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்காக 204 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மின் உற்பத்தி பாதிப்பு

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படும். இவ்வாறு நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றுவதன் காரணமாக மின் உற்பத்தி நடைபெறும். தற்போது பாசனத்தில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நீர்மின் நிலையங்களில் நடைபெற்று வந்த மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 933 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேலும் செய்திகள்