வினாடிக்கு 135 கனஅடி நீர்வரத்து: தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2022-12-12 18:45 GMT

நல்லம்பள்ளி:

தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொப்பையாறு அணை

தர்மபுரி மாவட்டம் தோப்பூர் ஊராட்சி செக்காரப்பட்டி பகுதியில் தொப்பையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை மற்றும் தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது வருகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டம் வழியாக சென்று மேட்டூர் அணையில் கலக்கிறது. இந்த ஆண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொப்பையாறு அணை நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

2-வது முறையாக திறப்பு

இந்தநிலையில் சேர்வராயன் மலை மற்றும் முத்தம்பட்டி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தொப்பையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் அணை தனது முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது.

அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, அதன் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆண்டில் 2-வது முறையாக நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாபு தலைமை தாங்கினார்.

வினாடிக்கு 135 கனஅடி

உதவி பொறியாளர் மோகனப்பிரியா மதகை இயக்கி, அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியில் கிராம வளர்ச்சிக்குழு தலைவர் முனுசாமி, கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொப்பையாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 135 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை பொறுத்து, அதிகமாகவும், குறைவாகவும் தண்ணீர் திறக்கப்படும்.

விவசாயிகள் மகிழ்ச்சி

அணையில் 4 மதகுகள் உள்ள நிலையில், தற்போது ஒரு மதகின் வழியாக மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் தர்மபுரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றனர்.

இந்த ஆண்டில் 2-வது முறையாக தொப்பையாறு அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்