காண்டூர் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறப்பு

சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து காண்டூர் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

Update: 2023-08-24 10:04 GMT

தளி

சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து காண்டூர் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

காண்டூர் கால்வாய்

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை மூலமாக பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரத்து152 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது அதற்காக நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் தளி வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 063 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

பி.ஏ.பி. திட்டத்தின் உயிர் நாடியான காண்டூர் கால்வாய் கடந்த 1960-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. கால்வாய் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளதால் மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படும்போது பாறைகள் மற்றும் மண் கால்வாயில் சரிந்து பக்கவாட்டு சுவர்களை சேதப்படுத்தி வந்தது. சேதம் அடைந்த கரையை சீரமைக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் நீரிழிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

இந்த நிலையில் விடுபட்ட பகுதியில் புனரமைப்பு பணி மேற்கொள்ள கடந்த 2021-ம் ஆண்டு ரூ. 72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு இருந்த காரணத்தினால் ஆண்டின் 10 மாதங்கள் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு 500 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முதல் மீண்டும் கால்வாய் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு 3 கிலோமீட்டர் நீளத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது " திருமூர்த்தி கோட்டத்திற்கு உட்பட்ட காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. பணியை விரைந்து முடித்து இந்த மாத இறுதியில் காண்டூர் கால்வாயில் தண்ணீர் கொண்டு வரப்படும்.அதை தொடர்ந்து திருமூர்த்தி அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் நீர்இருப்பு உயர்ந்த பின்பு நீர்வரத்து மற்றும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு உரிய முறையில் அனுமதி பெற்று தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்