கல்லணையில் தண்ணீர் திறப்பு

கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

Update: 2023-06-14 19:43 GMT

டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 3½ லட்சம் ஏக்கர் வரை பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை திறப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம்போல் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.

அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார்.

கல்லணை நாளை திறப்பு

இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக இன்று (வியாழக்கிழமை) இரவு கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கல்லணையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

முன்னதாக கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கருப்பண்ணசாமிகோவில் மற்றும் கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகிறது. கல்லணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்.

கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. மேலும் பாலத்தில் உள்ள மன்னன் கரிகாலன், ராஜராஜசோழன் மற்றும் அகத்தியர், கல்லணையை கட்டிய பொறியாளர் ஆர்தர் காட்டன், விவசாயி, மீன்பிடிக்கும் பெண், காவிரி அம்மன் ஆகிய சிலைகளுக்கும் புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.

3½ லட்சம் ஏக்கர்

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டு 3½ லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்