கருப்பாநதி அணை நீர்மட்டம் 2 நாளில் 6 அடி உயர்ந்தது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் கருப்பாநதி அணை நீர்மட்டம் 2 நாளில் 6 அடி உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் விழும் குறைவான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் கருப்பாநதி அணை நீர்மட்டம் 2 நாளில் 6 அடி உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் விழும் குறைவான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தொடர் மழை
தமிழகத்தில் கோடையில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ராதாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டியது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 88 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நெல்லை பகுதியில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியம் 12 மணி அளவில் லேசான மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, பாளைங்கோட்டை, மேலப்பாளையம், முன்னீர்பள்ளம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை அவ்வப்போது மிதமாக பெய்து கொண்டிருந்தது. இதனால் நெல்லையில் குளிர்ந்த காற்று வீசியது.
குற்றாலம் அருவிகளில் குறைவான தண்ணீர்
கோடையால் குற்றாலம் அருவிகள் வறண்ட நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியது. மெயின் அருவி, ஐந்தருவியில் விழும் குறைவான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சற்று அதிகமாக விழுந்ததால் அங்கும் ஏராளமானவர்கள் உற்சாகமாக குளித்தனர்.
கோடையால் கடையநல்லூர் அருகே கருப்பா நதி அணை வறண்ட நிலையில், தற்போது பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் கடந்த 2 நாட்களில் 6 அடி நீர்மட்டம் உயர்ந்து நேற்று 30.84 அடியாக இருந்தது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம்-14, சேர்வலாறு-22, மணிமுத்தாறு-8, நம்பியாறு-26, கொடுமுடியாறு-28, மாஞ்சோலை-13, காக்காச்சி-8, நாலுமுக்கு-4, ஊத்து-2, அம்பை-5, சேரன்மகாதேவி-6, ராதாபுரம்-88, களக்காடு-4, பாளையங்கோட்டை-7, நெல்லை-11. தென்காசி மாவட்டத்தில் ராமநதி-15, அடவிநயினார்-3, சங்கரன்கோவில்-10, சிவகிரி-18.