குறைந்து வரும் அமராவதி அணையின் நீர்மட்டம்

குறைந்து வரும் அமராவதி அணையின் நீர்மட்டம்

Update: 2023-01-19 10:31 GMT

தளி

வனப்பகுதியில் மழை இல்லாமல் ஆறுகளில் நீர்வரத்து குறைந்து போனதால் அமராவதி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதிஅணை கட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் மழை போதிய அளவு பெய்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் தொடர்மழை காரணமாக அணையின் முழு கொள்ளளவு நீர்மட்டம் 2 மாதம் நீடித்தது. அதை தொடர்ந்து நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த சூழலில் 2-ம் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நாற்றங்கால்

பருவமழை காலங்களில் அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்து வருகின்றோம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு பின்பு அவ்வப்போதும் மழை பெய்து வந்ததால் பருவநிலை மாற்றம் ஏற்படுடவில்லை. இதனால் பயிர்களும் நோய் தாக்குதலில் இருந்து தப்பித்து நல்ல முறையில் வளர்ந்து அறுவடையை எட்டியது. தற்போது 2-ம் போக சாகுபடியை தொடக்கி உள்ளோம். நாற்றங்கால் அமைத்து நிலத்தை உழுது பண்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்த சூழலில் அணையின் நீராதாரங்களில் நிலவுகின்ற வெப்பத்தின் தாக்குதல் காரணமாக நீர் வரத்து குறைந்து அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது. இதனால் நெற் பயிர்கள் அறுவடையை எட்டும் சூழலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது

.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 80.94அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 108 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 890 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்