வைகை அணைக்கு வரும் நீர்வரத்து 1,510 கன அடியாக உயர்வு

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

Update: 2022-07-05 05:43 GMT

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் மதுரை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், வருசநாடு, வெள்ளிமலை, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர்வரத்தாக உள்ளது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி வைகை அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1,510 கன அடியாக அதிகரித்துள்ளது. அதே நேரம் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்காகவும் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 869 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்