கோவை அரசு ஆஸ்பத்திரி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கோவையில் இடி, மின்னலுடன் பெய்த கன மழை காரணமாக அரசு ஆஸ்பத்திரி, புலியகுளத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-29 15:19 GMT

கோவையில் இடி, மின்னலுடன் பெய்த கன மழை காரணமாக அரசு ஆஸ்பத்திரி, புலியகுளத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன மழை

கோவையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் 2 மணி அளவில் மழை பெய்தது. இதையடுத்து நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

இதனால் காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், உக்கடம், கரும்புக்கடை, ராமநாதபுரம், பாப்ப நாயக்கன்பாளையம், சித்தாபுதூர், புலிய குளம், கவுண்டம்பாளை யம், அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் சந்திப்பு, பீளமேடு, சிங்காநல்லூர் உள்பட மாநகர் முழுவதும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இதில் பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்தது. இதனால் கோவை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. ஆட்டோ, பஸ், லாரி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மழைநீரில் நீந்தியபடி சென்றன.

போக்குவரத்து துண்டிப்பு

மாலை 4 மணி அளவில் மழை பெய்ததால் பள்ளிக்கூடங்கள் விட்ட பிறகும் வெளியே வர முடியாமல் மாணவ -மாணவிகள் தவித்தனர். இதற்கிடையே அரசு மற்றும் தனியார் பள்ளி வளா கங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. சில மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி இருந்தாலும் ஆபத்தை உணராமல் சிலர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது வாகனங்களுக்குள் மழைநீர் சென்றது. இதனால் சில வாகனங்கள் பழுதடைந்ததால் ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர்.

கோவை ரெயில்நிலையம் அருகே லங்கா கார்னர் ரெயில்வே சுரங்க பாதை மற்றும் அவினாசி சாலை மேம்பாலம் சுரங்க பாதையின் அடியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரி

இது போல் திருச்சி ரோடு முழுவதும் மழைநீர் தேங்கி கோவை அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. வார்டுகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்தது. மேலும் ஆஸ்பத்திரிக்குள் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வ.உ.சி.பூங்கா அருகே உள்ள ஒரு ஓட்டலுக்குள் மழைநீர் புகுந் தது. மேலும் மழை காரணமாக ரோடுகளில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் கீழே விழுந்தன. அந்த வாகனங்களை மூழ்கடித்தபடி மழைநீர் சென்றது.

வாகன ஓட்டிகள் அவதி

மழை நின்றதும் கோவை -அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, உக்கடம் பைபாஸ் சாலை, பேரூர் மெயின்ரோடு, அரசு கலைக்கல்லூரி சாலை என அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்துசென்றதால் துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.

சாலை மறியல்

இதற்கிடையே புலியகுளம் மசால் லே-அவுட் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சிலர் வீடுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மழை பெய்யும் போது எல்லாம் வீடுகளுக்கு தண்ணீர் புகுவதால் ஆத்திரம்அடைந்த பொதுமக்கள் புலியகுளம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ராமநாதபுரம்சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

மழை காரணமாக கோவை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாக பொதுமக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்