களக்காடு அருகே தோட்டத்தில் மின்வேலி அமைத்து கரடியை வேட்டையாடிய காவலாளி கைது

களக்காடு அருகே தோட்டத்தில் மின்வேலி அமைத்து கரடியை வேட்டையாடிய காவலாளியை போலீசார் கைது செய்தனர். இதில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. மேலும் 20 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-15 21:47 GMT

களக்காடு:

களக்காடு அருகே தோட்டத்தில் மின்வேலி அமைத்து கரடியை வேட்டையாடிய காவலாளியை போலீசார் கைது செய்தனர். இதில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. மேலும் 20 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரடி எலும்புக்கூடு

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பத்மநேரி பீட் கீழ வடகரையில் உள்ள குளத்து பகுதியில் கரடியின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில், வனச்சரகர்கள் பிரபாகரன், சிவலிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தோண்டி பார்த்தனர்.

அப்போது அங்கு கரடி புதைக்கப்பட்டு இருந்ததும், அதன் உடல் அழுகி சிதைந்த நிலையில் எலும்புக்கூடாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், அந்த கரடிக்கு சுமார் 8 வயது இருக்கும் என்றும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்த கரடியை புதைத்து இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

வனவிலங்குகள் வேட்டை

விசாரணையில், கீழ வடகரை மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் சிலர் சட்ட விரோதமாக கம்பியால் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது. மின்வேலியில் சிக்கி பலியாகும் மிளா, முயல், பன்றி, உடும்பு போன்றவற்றின் இறைச்சியை பங்கு போட்டுள்ளனர். மேலும் மின்வேலியில் சிக்கி இறந்த கரடி போன்ற வனவிலங்குகளை புதைத்தது தெரியவந்து உள்ளது.

அங்கு வேறு எங்கேனும் வனவிலங்குகளை புதைத்து உள்ளனரா? என்பதை கண்டறிவதற்காக மோப்ப நாய் 'ரெக்ஸ்' வரவழைக்கப்பட்டது. அது வனப்பகுதியில் மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் சென்றது. எனினும் வேறு எங்கும் வனவிலங்குகள் புதைக்கப்பட்டது கண்டறியப்படவில்லை.

தோட்ட காவலாளி கைது

மின்வேலி அமைத்து கரடியை வேட்டையாடி புதைத்தது தொடர்பாக, அங்குள்ள தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றும் நாகன்குளத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 54) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 20 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு

இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் கூறுகையில், ''களக்காடு அருகே கீழவடகரையில் வனத்துறையினர் ரோந்து செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்து தடுத்துள்ளனர். இதனால் அங்கு சட்ட விரோத செயல்கள் நடக்கலாம் என்று கருதி, தனிப்படை அமைத்து மாறுவேடத்தில் கண்காணித்து வந்தோம். இதில் அங்கு கரடி புதைக்கப்பட்டது தெரியவந்தது. அங்கு தோட்டத்தில் புதர்களுக்குள் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி இருக்கலாம் என்று தெரிகிறது. இதன் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள், வனவிலங்குகளின் இறைச்சியை பங்கு போட்டுள்ளனர். இதில் தொடர்புடைய 20 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் பலரும் சிக்குவார்கள் என்று தெரிகிறது. குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்