சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
நாகூரில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நாகூரில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நாகூர் தர்கா
நாகையை அடுத்த நாகூரில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். தர்காவிற்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பெரிய கடைத்தெரு உள்ளது. இந்த கடைத்தெருவில் 75-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த பெரிய கடைத்தெருவில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வியாபாரிகள் புகார்
இதன் காரணமாக சாலைகளில் நடந்து செல்பவர்கள் மூக்கைப்பிடித்தபடி செல்ல வேண்டி உள்ளது. இந்த பாதள சாக்கடை கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கடை வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.
ஆனாலும் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடை வியாபாரிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
நிறுத்த வேண்டும்
பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் அதிகமாக வெளியேறி வருவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய கடைத்தெருவில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.