கோவில் மாடு அடித்துக் கொல்லப்பட்டதா?

கோவில் மாடு அடித்துக் கொல்லப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-28 20:34 GMT

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை திருச்சி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பிடித்து மாடு பிடிக்கும் வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது மாடு ஒன்றை ஏற்றி வந்தபோது, திடீரென இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாட்டை உடற்கூறு ஆய்வுக்காக பாலக்கரையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு வாகனத்தில் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே கோவில் காளையை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பிடிக்கும்போது, அடித்துக்கொன்றுவிட்டதாக தகவல் பரவியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாடு வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் பாலக்கரை கால்நடை மருத்துவமனை முன்பு குவிந்தனர். அவர்கள் மாடு பிடிக்கும் வாகனத்தில் இருந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

பொதுமக்கள் திரண்டனர்

இது குறித்து அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாடு இறந்ததற்கான காரணம் தெரிந்து கொள்வதற்காக உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகே மாடு அடித்து கொல்லப்பட்டதா? என தெரியவரும். எனவே தகராறு செய்யாமல் கலைந்து செல்லும்படி, போலீசார் கூறினர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மாடு வளர்ப்போர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்