வன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கைமாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை

Update: 2023-05-10 19:00 GMT

வன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டரீதியான நடவடிக்கை

தர்மபுரி வனக்கோட்டத்தில் வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் வனப்பகுதிகளை பாதுகாக்கவும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் வனத்துறையினரின் விழிப்புணர்வு அணிவகுப்பு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தேவையின்றி அத்துமீறி நுழைதல், பட்டி அமைத்தல், சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், வன விலங்குகளை வேட்டையாடுதல், வன நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு வனசட்டத்தின்படியும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படியும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளத்துப்பாக்கி வைத்திருத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். கள்ள துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து போலீசார் அல்லது வனத்துறையிடம் ஒப்படைத்தால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது.

குண்டர் சட்டம்

மாறாக எவரேனும் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தாலோ அல்லது வன விலங்குகளை வேட்டையாடுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி வனச்சரகத்தில் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்து வன குற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பென்னாகரம் வனச்சரக அலுவலருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தீவிர ரோந்து மேற்கொண்ட போது உரிய அனுமதி பெறாத 2 கள்ளதுப்பாக்கிகள் கண்டறியப்பட்டன.

மொரப்பூர் வனச்சரகம் மூக்கனூர், கொடகரஅள்ளி வனப்பகுதியில் வன உயிரினங்களை வேட்டையாட முயன்ற நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பால் சிலம்பு பகுதியில் வனச்சரக அலுவலரால் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

துப்பாக்கிகள் பறிமுதல்

பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த 4 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் வனப்பகுதியில் ஒரு கள்ளத்துப்பாக்கி கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போர் மற்றும் வன குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த விவரங்கள் ஏதும் தெரிந்தால் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தகவல் அளிப்பவர்களுக்கு அரசால் தக்க சன்மானம் வழங்கப்படும். அவர்களுடைய பெயர், விவரம் ஆகியவை ரகசியமாக பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்