கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு
குண்டவெளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி ஊராட்சி அலுவலகத்தில் காந்திஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி தெய்வமணி தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்திற்கு வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கிராமங்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மனு அளிப்பதற்காக வந்தனர். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வார்டு உறுப்பினர்கள் பொது செலவினம், வரவு- செலவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு குண்டவெளி ஊராட்சி மன்றத் தலைவர் உரிய பதிலளிக்காமல், இதுபற்றி எல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று வார்டு உறுப்பினர்களையும், பொதுமக்களையும் பார்த்து கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டனர். இதனை ஊராட்சி மன்ற தலைவர் ஏற்க முன் வராமல் கூட்டத்தில் இருந்து எழுந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று விட்டதாகவும் தெரிகிறது.
இதில் அதிருப்தி அடைந்த வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துவிட்டு அவர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து மனு அளிக்க வந்த கிராம பொதுமக்கள், மனுவை கொடுப்பதற்கு ஆட்கள் இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது