ஒன்றிய அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம்
மயிலாடும்பாறையில் ஒன்றிய அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்த்தில் ஈடுபட்டனர்.;
கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி நேற்று 20-க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா கட்சியினர் மயிலாடும்பாறையில் உள்ள ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஒன்றிய ஆணையர் இல்லாததால் அலுவலக நுழைவுவாயிலில் அமர்ந்து அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பா.ஜ.க.வினர் கூறுகையில், கடமலை- மயிலை ஒன்றியத்தில் நடைபெறும் ஒப்பந்த பணிகளுக்கு வேலைகளை செய்ய விடாமல் சிலர் இடையூறு செய்கின்றனர். மேலும் முடிக்கப்பட்ட வேலைகளுக்கு உரிய தொகை வழங்காமல் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். அரசு ஒப்பந்ததாரரான கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி செய்த வேலைக்கு பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் செய்து வந்த தடுப்பணை கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 2 முறை ஒன்றிய ஆணையரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்றனர்.
அதன் பின்னர் ஆணையர் அய்யப்பன் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.