விருத்தாசலம் நகர மன்ற கூட்டத்தில்அதிமுக-திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்கூட்டம் தொடங்கிய சிறிது நிமிடத்திலேயே முடிவடைந்ததால் பரபரப்பு

விருத்தாசலம் நகர மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டம் தொடங்கிய சிறிது நிமிடத்திலேயே முடிவடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-10 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் நகரமன்ற கூட்டம் நேற்று அதன் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.

இதில் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், முத்துக்குமரன், அன்சர் அலி, சிங்காரவேல், அறிவழகி, வசந்தி, கர்ணா, பி.ஜி சேகர், கரிமுன்னிஷா, குமாரி, ஷகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகர மன்ற தலைவருக்கு ரூ.15 ஆயிரம் துணை தலைவருக்கு ரூ.10 ஆயிரம், நகர மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து நகராட்சியின் வரவு செலவு கணக்கீடுகள் நகரமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

நிதி கொடுக்க மறுப்பு

தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

அன்பழகன் (தி.மு.க.):- விருத்தாசலம் பாலக்கரையில் புறநகர் காவல் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. இந்த பஸ் நிறுத்தத்தை பாலக்கரையில் இருந்து ஜங்ஷன் சாலையின் முகப்பில், அகலமாக உள்ள பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும்.

நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ்:- நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.ஆர்.சி. சந்திரகுமார் (அ.தி.மு.க.):- பல முறை புகார் தெரிவித்தும் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. என்.எல்.சி. சி.எஸ்.ஆர். நிதியை பெற்றாவது வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்.

டாக்டர் சங்கவி முருகதாஸ் :- விருத்தாசலம் என்றாலே என்.எல்.சி. நிர்வாகம் நிதி கொடுக்க மறுக்கிறார்கள்.

முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை

பி.ஆர்.சி.சந்திரகுமார்:- என்.எல்.சி. நிர்வாகத்தால் விருத்தாசலம் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. விருத்தாசலம் நகராட்சிக்கு ஏன் அவர்கள் நிதி கொடுக்க மறுக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்பதை நகர மன்ற தலைவர் தெரிவிக்க வேண்டும். ஆற்றை பராமரிக்க நிதி கொடுத்தும் சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறி நிதி வழங்க மறுக்கிறார்கள்.

ஆட்டோ பாண்டியன் (தி.மு.க.):- ஆற்றை பராமரிக்க ஒதுக்கிய நிதி என்ன ஆனது. கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள்.

பி.ஆர்.சி.சந்திரகுமார்:- என்னுடைய வார்டு மட்டுமல்ல 33 வார்டுகளிலும் இதே நிலை தான் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை.

வாக்குவாதம்

ராசாத்தி (தி.மு.க.) :- நகர மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் ரூ.600 கொடுத்த போது ராஜினாமா செய்யாமல் ரூ.5 ஆயிரம் கொடுக்கும் போது ராஜினாமா செய்வது ஏன்?.

பி.ஆர்.சி.சந்திரகுமார்:- ரூ.5 ஆயிரம் மு.க.ஸ்டாலின் அவர்களின் பூர்வீக சொத்தில் இருந்து தருகிறாரா? நான் நகர மன்ற தலைவரிடம் தான் கேட்டேன். உங்களிடம் கேட்கவில்லை.

இதற்கு ஆட்டோ பாண்டியன், அன்பழகன், சுந்தரி உள்ளிட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு சேர சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சந்திரகுமார், அருண், ராஜேந்திரன் பா.ம.க. கவுன்சிலர் சிங்காரவேல் ஆகியோருக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பரபரப்பு

இதையடுத்து தீர்மானம் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று கூறி கூட்டம் தொடங்கிய சிறிது நிமிடங்களிலேயே நகரமன்ற தலைவரும், நகராட்சி ஆணையாளரும் இருக்கையை விட்டு எழுந்து சென்றனர். இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள், கூட்டம் முடிந்து விட்டது என்று கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்கள். அப்போது பா.ம.க. கவுன்சிலர் குமாரி கூட்டம் தொடங்கவே இல்லை. அதற்குள் கூட்டம் முடிவடைந்தால், பொதுமக்களின் கோரிக்கையை நாங்கள் எப்படி தெரிவிக்க முடியும் என தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் அங்கிருந்து வெளியேறினார்கள்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்து கொண்டு வெளியேறிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்