திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர் பகுதிகளில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-01-25 16:59 GMT

திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வாக்காளர் தின உறுதிமொழி

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில், அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் மூலம் நடத்தப்பட்ட ரங்கோலி கோலப்போட்டி ஆகியவற்றில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் விசாகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், கிழக்கு தாசில்தார் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே நடந்தது. இதில், கலெக்டர் விசாகன் கலந்துகொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலக சாலை, பஸ் நிலையம், பூ மார்க்கெட், அரசு ஆஸ்பத்திரி வழியாக சென்று மீண்டும் கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்து நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கரகம் எடுத்து ஆடியபடியும், தேவராட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனம் ஆடியபடியும் ஊர்வலமாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நத்தம், வேடசந்தூர்

இதேபோல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் தேசிய வாக்காளர் தினவிழா நடைபெற்றது. இதற்கு என்.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.பி.ஆர். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

வேடசந்தூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை, தாசில்தார் சக்திவேலன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பள்ளியில் இருந்து வேடசந்தூர் பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தின்போது மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் நாட்ராயன், வருவாய் ஆய்வாளர் முத்துநாயகி, கிராம நிர்வாக அதிகாரி சந்தானகிருஷ்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், வேல்ராஜ் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

வத்தலக்குண்டு

வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் பாத்திமா தலைமை தாங்கினார். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத்தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் வருவாய் ஆய்வாளர் அங்குச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி செல்வகணபதி, ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் வத்தலக்குண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பேரூராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. முன்னதாக அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்