ஈரோடு மாவட்டத்தில் ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை 10 லட்சம் பேர் இணைப்பு
ஈரோடு மாவட்டத்தில் ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை 10 லட்சம் பேர் இணைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை 10 லட்சம் பேர் இணைத்துள்ளனர்.
ஆதார் எண் இணைப்பு
வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர், 2 இடங்களில் இடம் பெறுவதை தவிர்க்கவும், கள்ள ஓட்டு போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த பணி நடந்து வருகிறது. ஆன் லைன் மூலமும், வாக்காளர் சேர்க்கை உள்ளிட்ட முகாம்களிலும், தேர்தல் பிரிவில் ஆவணத்துடன் கடிதம் வழங்கியும் இணைக்கப்படுகிறது.
10 லட்சம் பேர்
ஈரோடு மாவட்டத்தில் 951 இடங்களில் உள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமும் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர், கோபி, அந்தியூர், பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரத்து 580 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 2 ஆயிரம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். இது 55 சதவீதம் ஆகும். இன்னும் 9 லட்சத்து 43 ஆயிரத்து 580 பேர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.