விருதுநகர் பா.ஜ.க. அலுவலகத்தில் பாரதமாதா சிலை அமைக்க அரசிடம் அனுமதி பெறப்பட்டதா? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

விருதுநகர் பா.ஜ.க. அலுவலகத்தில் பாரதமாதா சிலை அமைக்க அரசிடம் அனுமதி பெறப்பட்டதா? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2023-08-22 20:24 GMT


விருதுநகர் மாவட்டம் சூரைக்குண்டு அருகே பா.ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்புறம் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பாரத மாதா சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை அமைக்க அரசிடம் அனுமதி பெறவில்லை என்று கூறி, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சிலையை பறிமுதல் செய்தனர். முன்அறிவிப்பின்றி பட்டா இடத்துக்குள் நுழைந்து பாரதமாதா சிலையை எடுத்துச்சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலையை திரும்ப கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தனியாரிடம் அல்லது பட்டா இடம் எதுவாக இருந்தாலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எந்த ஒரு சிலையையும் நிறுவ அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சுற்றறிக்கை உள்ளது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிலையை அமைக்க உரிய அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். பின்னர். இந்த வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்