பால் விற்பனையை குறைத்து முறைகேடு: விராலிமலை பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் நீக்கம்

பால் விற்பனையை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் விராலிமலை பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் நீக்கப்பட்டார். மேலும், செயலாளரை இடை நீக்கம் செய்து ஆவின் துணை பதிவாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2023-01-28 18:30 GMT

திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வந்தவர் நித்யா. இவர் பல்வேறு முறைகேடுகள் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சங்க அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் துணை பதிவாளர் (பால்வளம்) ஜெயபாலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சங்க உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்குரிய கொள்முதல் பதிவேட்டை பராமரிக்காதது, உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் எவ்வளவு பால் கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரம் இல்லாதது, உள்ளூர் விற்பனை எவ்வளவு, ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பால் அளவு விவரம் குறித்து பதிவேடுகள் இல்லாதது.

தலைவர் நீக்கம்

சங்க துணை விதிகளுக்கு புறம்பாக உள்ளூர் பால் விற்பனையை குறைத்து காண்பித்து நிதியிழப்பு செய்தது. சங்க செயலாளர் பணிக்கு வராமல் ஆள்மாறாட்டம் செய்து கணவர் அரங்கசாமி மற்றும் மாமனார் தங்கவேலு ஆகியோரை சங்க துணைவிதிகளுக்கு முரணாக சங்க பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது. தனியார் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்தது. சங்க கணக்குகள் 1-4-2022 முதல் 20-1-2023 வரையிலான ஆவணங்களை சமர்ப்பிக்காமல் கையாடல் செய்தது போன்றவை ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து சங்க செயலாளராக இருந்த நித்யாவை இடைநீக்கம் செய்தும், சங்கத்தின் தலைவர் சாந்தி புஸ்பவள்ளியை பதவி நீக்கம் செய்தும் மாவட்ட துணை பதிவாளர் ஜெயபாலன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்