வன்முறை வழக்குகளில் விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்
பட்டியலின, பழங்குடியின மக்களின் மீதான வன்முறை வழக்குகளில் உரிய விசாரணை நடத்தி, விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுறுத்தினார்.
டி.ஐ.ஜி. ஆய்வு
வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் தனி விரல் கைரேகை ஆய்வு கூடம், காவல் புகைப்பட பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆகிய பிரிவுகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார்.
வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவும், வழக்கை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் நடத்தி குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தருமாறும் அறிவுறுத்தினார்.
தண்டனை
மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களிடையே நற்பெயர் எடுக்கும் வகையில் நல்ல முறையில் பணிசெய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளில் முறையாக புலன் விசாரணை செய்து குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு பெற்றுத்தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் (தலைமையிடம்) வெ.விசுவேசுவரய்யா, ராஜாசுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.