விதிகளை மீறி வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள்; 1.34 லட்சம் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு - சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல்
2022-ம் ஆண்டில் நம்பர் பிளேட் விதிமீறல்கள் தொடர்பாக 1.34 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
பெங்களூரு போக்குவரத்து காவல்துறை ஆணையர் குல்தீப் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் விதிகளை மீறி சிலர் இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்தி வருவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் இது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த டுவிட்டர் பதிவின் பின்னூட்டத்தில் சென்னையில் இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை தீவிரம் காட்டுவதில்லை என ஒருவர் பதிவிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர், நம்பர் பிளேட் விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட அபராதம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 2022-ம் ஆண்டில் வாகனங்களில் விதிகளை மீறி வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தியது தொடர்பாக 1 லட்சத்து 34 ஆயிரத்து 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகளில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 51 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.