விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்யும் பணி தீவிரம்

Update: 2022-08-12 16:53 GMT


விநாயகர் சதுர்த்திக்காக பொங்கலூரை அடுத்துள்ள அலகுமலையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பக்தர்கள் விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். அதன் பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். அந்த வகையில் திருப்பூரில் பல்வேறு பகுதிகளுக்கும், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கும் விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்க இந்து முன்னணி சார்பில் பொங்கலூரை அடுத்துள்ள அலகுமலை அருகில் சிலைகள் செய்யும்பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிற்பக் கலைஞர்கள் அங்கேயே தங்கி பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஆகியோர் கூறியதாவது:-

5 ஆயிரம் சிலைகள்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்களும் ஆர்வமுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. 3 அடி முதல் 11 அடி வரை சிலைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கருட வாகனத்தில் அமர்ந்த விநாயகர், ரத விநாயகர், சித்தி புத்தி விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், சிவன் பார்வதி விநாயகர் என பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பொருட்களைக் கொண்டு இயற்கையான வண்ணங்கள் தீட்டப்பட்டு சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு சிலைகள் அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்