விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 80 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலைகள்
இந்து முன்னணி சார்பில் தாராபுரம், பொன்னாபுரம், அலங்கியம், தேவநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ½ அடி முதல் 7 அடி வரையிலான 80 விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதற்கு இந்து முன்னணி திருப்பூர் கோட்ட செயலாளர் பி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் செய்யப்பட்டன. விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொறி, பழங்கள் படையலாக வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் வாகனங்கள் மற்றும் டிராக்டர்களில் விநாயகர் சிலைகள் பொள்ளாச்சி ரவுண்டானாவுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை பா.ஜனதா மாவட்டத் துணை தலைவர் விஜயசந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சங்கிலி, கதிர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமராஜ், செல்வம், நகரத் தலைவர் பாலு, ஒன்றிய தலைவர் நடராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆற்றில் சிலைகள் கரைப்பு
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக பூக்கடை கார்னர், என்.என்.பேட்டை வழியாக தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு அமராவதி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாய் சாய் தலைமையில் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்புசாமி, விஜயபாஸ்கர் உள்பட 100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.