விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலக சுவர்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் மோகன் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலக சுவர்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், அரசுப்பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு அலுவலகங்களில் தனிநபர்கள் மற்றும் அமைப்பினர் ஆகியோர் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி அரசு அலுவலகங்களில் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்ட வண்ணம் உள்ளன. இதன் மூலம் அரசு அலுவலக சுவர்கள் பாதிப்படைகிறது, தோற்றமும் மாறுபடுகிறது. இதனை சரிசெய்யும் செலவினமும் அரசையே சார்கிறது. எனவே இனிவரும் காலங்களில் முற்றிலுமாக அரசு அலுவலக சுவர்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டும் தனிநபர்கள் மற்றும் அமைப்பினர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.