மண்எண்ணெய், விறகு அடுப்பு பயன்படுத்தும் கிராம மக்கள்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் கிராம மக்கள் மண்எண்ணெய், விறகு அடுப்பு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் கிராம மக்கள் மண்எண்ணெய், விறகு அடுப்பு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
கியாஸ் விலை உயர்வு
நாடு முழுவதுமே வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிலிண்டர் ஒன்றின் விலை 500 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது வீடுகளில் பயன்படுத்தும் ஒரு கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1050 வரை உயர்ந்து விட்டது. கியாஸ் சிலிண்டரின் இந்த விலை உயர்வு ஒட்டுமொத்த மக்களையும் அதிகமாகவே பாதித்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக கிராமப்புறங்களில் பலரும் மீண்டும் மண்எண்ணெய் அடுப்பு மற்றும் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல கிராமங்களிலும் மக்கள் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக விறகு அடுப்பு மற்றும் மண்எண்ணெய் அடுப்பு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர்.
விறகு அடுப்பு
குறிப்பாக ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர், குளத்தூர், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை, சத்திரக்குடி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, கீழக்கரை உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களிலும் மக்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் மக்கள் விறகு அடுப்பில் சமைப்பதற்காக காய்ந்த முள் மற்றும் கருவேல மரங்களையும் வெட்டி எடுத்து வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
சமையல் கியாஸ் சிலிண்டரின் தொடர் விலை உயர்வு பெண்களை அதிக அளவில் பாதித்துள்ளது. கூட்டு குடும்பமாக இருந்தால் 1 மாதத்தில் 2 சிலிண்டர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என உள்ள ஒரு குடும்பத்திற்கும் மாதம் ஒரு சிலிண்டர் தேவைப்படுகிறது.
நடுத்தர மக்கள் பயன்பெற
ஒட்டுமொத்தத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மட்டும் மாதந்தோறும் தனியாக பணம் எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. சிலிண்டரின் அதிக விலை உயர்வு காரணமாக மக்கள் மீண்டும் விறகு அடுப்பு மற்றும் மண்எண்ணெய் அடுப்பு பயன்படுத்தும் நிலைக்கு மாறிவிட்டோமே என்று புலம்பியும் வருகின்றனர்.
எனவே இதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வீடுகளில் மக்கள் பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டரின் விலையை குறைத்தால் ஏழை, எளிய நடுத்தர மக்களும் பயன்பெறுவார்கள்.