குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதி
திருமருகல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி அடைந்து வரும் கிராம மக்கள், பணம் கொடுத்தும் தண்ணீர் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி அடைந்து வரும் கிராம மக்கள், பணம் கொடுத்தும் தண்ணீர் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு
திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கள்ளிக்காட்டு போலகம் வள்ளுவர் தெருவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாடம் குடிக்கவும், பல்வேறு பயன்பாட்டுக்காவும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீரை நம்பியே உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுேம குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் குறைவான அளவே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பணம் கொடுத்து தண்ணீர் வாங்குகின்றனர்
குடிநீர் வழங்கக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அண்டை மாநிலமான காரைக்கால் பகுதியில் ஒரு குடம் குடிநீர் ரூ.5 செலுத்தி எடுத்து வரும் அவல நிலையில் உள்ளனர். இந்த குடிநீரும் சரிவர கிடைக்காததால் டேங்கர் லாரிகள் மூலம் 1,000 லிட்டர் தண்ணீரை ரூ.1,500 செலுத்தி பெற்று வருகின்றனர். இந்த தண்ணீரை 5 நாட்கள் வரை பயன்படுத்தி வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் இப்பகுதியில் உள்ள சாலைகளை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்து இருப்பதால் அவசரத்திற்கு சென்று வர சாலை வசதி இல்லாததாலும், சாலையின் நடுவில் அமைந்துள்ள மின்கம்பங்களாலும் 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் நிலை உள்ளது.
இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள்ளிக்காட்டு போலகம் வள்ளுவர் தெருவில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், சாலை வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.